×

ஊரடங்கால் பங்குனி திருவிழா ரத்து தனியாக தீச்சட்டி ஏந்தி பெண் நேர்த்திக்கடன்: விருதுநகரில் பரபரப்பு

விருதுநகர்: ஊரடங்கு உத்தரவால் பங்குனி திருவிழா ரத்தானதையடுத்து, தனியாக தீச்சட்டி ஏந்தி பெண் நேர்த்திக்கடன் செலுத்திய சம்பவம் விருதுநகரில் பரபரப்பை ஏற்படுத்தியது.விருதுநகர் மாரியம்மன் கோயில் பங்குனி பொங்கல் திருவிழா தென்மாவட்டத்தில் பிரசித்தி பெற்றது. இக்கோயிலில் பங்குனி பொங்கல் திருவிழா மார்ச் 15ல் சாட்டுதலுடன் துவங்கியது. ஊரடங்கு உத்தரவை தொடர்ந்து, திருவிழா ரத்து செய்யப்பட்டது. இதையடுத்து மக்கள் தங்களது வீடுகளில் விளக்கேற்றி அம்மனை வழிபடுமாறு கோயில் நிர்வாகம் கேட்டுக்கொண்டது. நேற்று முன்தினம் பங்குனி பொங்கல் மற்றும் நேற்று தீச்சட்டி திருவிழா நடப்பதாக இருந்தது. ஊரடங்கு உத்தரவால் இரண்டுமே நடைபெறவில்லை.

விருதுநகர் அருகே அல்லம்பட்டியை சேர்ந்தவர் தனலட்சுமி (48). இவர் பங்குனி திருவிழாவை முன்னிட்டு தீச்சட்டி ஏந்தி நேர்த்திக்கடன் செலுத்துவதாக வேண்டியிருந்தார்.
திருவிழா ரத்தானதால் நேற்று காலை இவர் கைகளில் தீச்சட்டி ஏந்தியபடி தனிநபராக வீதிகளில் வலம் வந்து விருதுநகர் மாரியம்மன் கோயில் முன்பு சாமியாடினார். அப்போது கூடியிருந்த பெண்கள் பக்தி பரவசத்துடன் குலவையிட்டனர். பின்னர் பூட்டி இருந்த அம்மன் கோயில் வாசல் முன்பு ஏந்தி வந்த தீச்சட்டியை இறக்கி நேர்த்திக்கடனை செலுத்தி விட்டு சென்றார். இதனால் கோயில் வழியாக மார்க்கெட் சென்ற மக்கள் பக்தி பரவசத்திற்கு ஆளாகினர்.



Tags : cancellation ,festival ,Urundangal Panguni , Woman ,alone , cane
× RELATED ஹாங்காங்கில் பன் திருவிழா கொண்டாட்டம்..!!